--- --:--:-- --

பட்டா போதுமா..? மூல ஆவணம் எங்கே? ‘முரசொலி’ இடம் ‘பஞ்சமி நிலம்’ தான்..! ராமதாஸ் காட்டம்

images

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்றும் நிலப்பதிவு ஆவணத்தையும், மூல ஆவணத்தையும் காட்டாமல்,1985-ம் ஆண்டு வாங்கிய பட்டாவைக் காட்டுவதன் மர்மம் என்ன? என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அசுரன் படம் பார்த்த மு.க.ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பை மையப்படுத்திதை பாராட்டி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அசுரன்-படம் அல்ல பாடம் என்றும் பாராட்டு தெரிவித்திருந்தார். பதிலுக்கு தனுஷும், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

 

இதனை விமர்சனம் செய்திருந்த பா.ம.க. தலைவர் டாக்டர் . ராமதாஸ், திமுக நாளேடான முரசொலி நாளிதழின் அலுவலகம் அமைந்துள்ளதே பஞ்சமி நிலத்தில் தானே? என்று மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் ராமதாசுக்கு சவால் விடுத்திருந்தார். முரசொலி இடத்தின் பட்டா நகலை பதிவிட்டு, பட்டா இடத்தில் தான் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது. நான் சொல்வது பொய் என்றால் அரசியலை விட்டு விலகத் தயார். இல்லாவிட்டால், ராமதாஸ் சொல்வது பச்சைப் பொய் என்றால் அவரும் அவருடைய மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின், இடத்தின் மூல ஆவணங்களை மறைத்து பட்டாவை மட்டும் காட்டி உண்மையை மறைப்பதாகக் கூறியும், முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்றும் கூறி டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

 

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது என்பது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

 

நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை..! என டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon