மூன்றாவது அணியை மக்கள் நிராகரிப்பார்கள்..!
தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களத்தில் போட்டி இரண்டு திராவிட கட்சிகள் தலைமையிலான கூட்டணிக்கு இடையில் தான் என்றும் மக்கள் மூன்றாவது அணியை ஆதரிப்பதில்லை என்றும் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார் ஆங்கில நாளிதழான தி இந்து’வுக்கு தமிழக முதலமைச்சர் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசன் போன்ற மூன்றாவது ஒருவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.
மூன்றாவது அணியை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலன் கூட்டணி தோல்வி அடைந்ததை அதற்கு உதாரணம் எனவும் கூறியுள்ளார். தங்களது கூட்டணியில் மாற்றம் வராது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் அறிவித்த பின்னர் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து அதிமுகவிற்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் இதை வெளிப்படுத்தும் வகையிலேயே அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் கூட்டணி தொடர்வதை அறிவித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு எனக் கூறப்படுவதை மறுக்கும் முதல்வர் இருவரும் இணைந்து கட்சிக்காகவும், மாநிலத்திற்கும், மக்களுக்காகவும் உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.






