கொரொனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்க 60 நாட்கள் ஆன நிலையில் அடுத்த 14 நாட்களிலே அடுத்த 10 ஆயிரம் ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தொட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 700-க்கும் அதிகமாகவும், மே 25ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தலா 800 க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் ஒரே அளவில் 938 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலும் 687 பேர் குணமடைந்த நிலையில் மொத்தமாக குணமடைந்தவரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உள்ளது. 9 ஆயிரத்து 21 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
உயிரிழப்பு 160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி 10 ஆயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்த 15 நாட்களில் 21 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 14 ஆயிரத்து நெருங்கியுள்ளது. அடுத்ததாக மாவட்ட அளவில் செங்கல்பட்டில் 94 பேரும், திருவள்ளூரில் 28 பேரும், காஞ்சிபுரத்தில் 22 பேருக்கும் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை முதல் 10 ஆயிரத்தை எட்ட 64 நாட்கள் ஆன நிலையில் இரண்டாவது பத்தாயிரம் பாதிப்பு வெறும் 14 நாட்களில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு என்பது ஒப்பீட்டளவில் கடந்த 11 நாட்களாக மிகவும் அதிகமாக உள்ளது. மே 3ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு நாள் எண்ணிக்கை 300 ஐ தாண்டவில்லை. திடீரென நான்காம் தேதி ஒரே நாளில் 527 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அப்போது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக இருந்தது. அதன் பிறகு மே 13ஆம் தேதி வரை ஒரு நாளில் பாதிப்பு எண்ணிக்கை 500 க்கு கீழ் குறையவில்லை. இடையே மே 6, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 700 ஐ கடந்தது. இப்படி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த நிலையில் திடீரென மே 14-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 447 ஆக குறைந்தது.
இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். மே 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பாதிப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ்தான் பதிவானது. அதன் பிறகு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் திரும்ப தொடங்கியதையடுத்து மே 17 இல் இருந்து பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியது.
மே 20 முதல் 24 வரை ஒரே நாளில் பாதிப்பு 700 க்கும் அதிகமாக இருந்த நிலையில் மே 25ஆம் தேதி முதல் முறையாக 800 ஐ கடந்தது. கடந்த 3 நாட்களாக சீராக உயரத் தொடங்கிய தொற்று எண்ணிக்கை தற்போது 938 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 14 நாட்களில் தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.






