நல்லநாள், நேரம் பார்த்து மனுதாக்கல் செய்த ஓ.பி.எஸ்! வெற்றி உறுதி என நம்பிக்கை!!
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த நாள் பார்த்து மனுவை ஓபிஎஸ் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 6ம் தேதி, ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிற்பகல் 3 மணிவரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வேட்புமனுதாக்கலுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்களுடன் செல்வதற்கு 2 பேரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலுக்கு முன்பாக, போடி சாலையில் இருக்கும் காளியம்மன் கோவிலில், ஓ.பி.எஸ் வழிபாடு நடத்தினார். போடிநாயக்கனூர் தொகுதியில் ஓபிஎஸ் 3-வது முறையாக களமிறங்குகிறார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக சார்பில் போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2011 தேர்தலில் போடியில் போட்டியிட்ட போது மக்கள் அமோக ஆதரவு அளித்தனர். 2 முறை வெற்றி பெற செய்த போடி மக்களுக்கு சேவைபுரிய மீண்டும் போட்டியிட்டுளேன்.
போடி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் போடி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மீண்டும் வெற்றிபெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் போடியில் நிற்கிறேன். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றார்.





