எகிப்தில் இருந்து கோவைக்கு வந்த வெங்காயம் !!!
எகிப்து நாட்டில் இருந்து கோவை எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு 60 டன் பெரிய வெங்காயம் இரண்டு கண்டெய்னர் லாரியில் இருந்து வந்தது.
நாடு முழுவதும் பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஒரு கிலோ பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.இதனால் மக்கள் அன்றாட சமையலுக்கு அவதிப்பட்டு வந்தனர்.சம்பளத்தில் ஒரு பகுதியை வெங்காயத்திற்காக செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எகிப்து நாட்டில் இருந்து கப்பலில் 10 நாட்கள் பயணித்து கேரளாவிற்கு வெங்காயம் வந்தது. அங்கிருந்து இரண்டு நாட்களில் இரண்டு லாரிகளில் கோவை வந்து சேர்ந்தன .
19 கிலோ எடை கொண்ட நைலான் சாக்குப்பையில் நிரப்பிக்கொண்டு 30 டன் அளவில் இரு லாரிகளில் கொண்டு வரப்பட்டன.இதுகுறித்து வெங்காய இறக்குமதியாளர் கூறுகையில் எகிப்து வெங்காயம் நல்ல காரத்தன்மை கொண்டது.நம்ம ஊர் வெங்காயம்-2 பயன்படுத்துவதற்கு பதிலாக அரை அல்லது ஒரு வெங்காயம் பயன்படுத்தினால் போதும் உணவின் சுவை மேலும் கூடும். தற்போது கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிக்க விலை குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.





