சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் – சீமான் மீதான வழக்கில் நடிகை திட்டவட்டம்
சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென நடிகை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னுடன் உறவு வைத்துக் கொண்ட சீமான், பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை ஒருவர் 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கில் சீமானிடம் 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது “இந்த விவகாரத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். மூன்று முறை இதுவரை வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்” என்று சீமான் தரப்பு வாதிட்டது. அப்போது பேசிய நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வேண்டும். ஏன் இரு தரப்பும் பேசி செட்டில்மென்ட் அடிப்படையில் சுமூக முடிவு எடுக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், சுமூக முயற்சி எடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது” என்றும் நீதிபதிகளிடம் குற்றச்சாட்டு வைத்தார்.
இதன்பின் தமிழக காவல்துறை மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், 12 வாரங்களில் வழக்கை விசாரிக்க ஆணையிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். தொடர்ந்து இரு தரப்புக்கும் செட்டில்மென்ட் ஏற்படுமா என பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். கடந்த மார்ச் மாதம் இந்த சம்பவங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென நடிகை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நடிகை அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரி சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான நடிகை, சீமானுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றார். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில், 4 வாரத்திற்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.



