புதிய தலைமை தேர்தல் ஆணையர் இன்று பதவி ஏற்பு..!
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கும் நிலையில், அவரது நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நாட்டின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவியேற்கிறார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமாரை, தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். கேரளாவிலிருந்து 1988ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட ஞானேஷ் குமார், நாடாளுமன்ற விவகாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பதவி வகித்து வந்தார். 2029ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வரை இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானேஷ் குமாரின் தலைமையின் கீழ் இந்தாண்டு பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை ஞானேஷ் குமார் வழி நடத்த உள்ளார். 2027ஆம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலையும் ஞானேஷ் குமார் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அவரது பதவிக்காலம் முடிந்துவிடும்.கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்க வகை செய்யும் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிரதமர், மூத்த மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய உயர்நிலைக் குழு தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய சட்டத்தின் மூலம் தேர்வு குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, மூத்த மத்திய அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.





