உருமாறிய கொரோனா வைரஸ்.இங்கிலாந்தில் இருந்து கோவை வந்த 133 பயணிகள் ?. கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் !!!
இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்த 133 பேரை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இங்கிலாந்து நாட்டில் பரிணாம மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது உள்ளதைவிட 70% விரைவாக பரவக்கூடியது. இதை தொடர்ந்து இந்தியாவில் வருகிற 31-ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை வந்த பயணிகளின் விவரங்களை கண்டறிந்து,அவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் இருந்து சென்னை, கொச்சி உள்ளிட்ட பல்வேறுவிதமான விமான நிலையங்கள் மூலமாக கோவைக்கு 133 பயணிகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களைக் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தற்போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பேசும் பொழுது ” இங்கிலாந்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 133 பேர் வந்துள்ளனர். அவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் நெகட்டிவ் என தெரியவந்தால் அவர்கள் 12 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவர்.
தொற்று உறுதி என முடிவு வந்தால் சம்பந்தப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.இதில் சிலரை கண்டறிந்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.







