செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. போலீஸ் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்!! பதைபதைக்க புகார் சொன்ன நிருபர்.. மாமூலுக்காக போலீஸ் அலட்சியம் ?
பல்லடத்தில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து முன்பே தெரிவித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, அவர்கள் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மாமூலுக்கு ஆசைப்பட்டு, செய்தியாளர் தந்த புகாரை கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர், பிரபலமான நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அவரை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.
2 கைகள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், திருப்பூர் மாவட்ட அளவில் மட்டுமின்றி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பே தகவல் சொன்ன நிருபர்
மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், காவல்துறை, இதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. புகார் சொன்னவர், பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர்; அவரையே பல குறுக்கு கேள்விகளை கேட்டு காலம் தாழ்த்தியுள்ளனர் போலீசார்.
மர்ம நபர்கள் பின் தொடர்வதாக பதைபதைப்புடனும் நேசப்பிரபு போலீசாரிடம் போனில் தெரிவித்த போது, போலீசாரோ பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, பதற்றத்துடன் பேசிய நிருபரை போனிலேயே குறுக்கு விசாரணை செய்வது போல் கேள்வி மேல் கேள்வி கேட்டு காலம் கடத்தினர்.
கேள்வி கேட்டு தாமதப்படுத்திய போலீஸ்!
உங்களை பின் தொடர்பவர்களின் வண்டி நெம்பர் என்ன… வண்டி என்ன கலர், என்ன மாடல் வண்டி? ஸ்கூட்டரா… கியர் வண்டியா? என்றெல்லாம் காவல்துறை கேள்வி கேட்டு முடிப்பதற்குள் மர்ம கும்பல் அவரை நெறுங்க, ஐயோ சார், என்கிட்ட வந்துட்டாங்க… என் கதை முடிஞ்சது என்ற நிருபர் நேசப்பிரவு அலறும் ஆடியோ, கேட்போர பதறச் செய்வதாக உள்ளது. ஆனால், பல்லடம் போலீசாரே சாவகாசமாக இந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் இருந்ததால், செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இந்த நிலைக்கு பல்லடம் காவல்துறையினர் மட்டுமே காரணம்.
காவல்துறைக்கும் அவசர உதவி எண் 100க்கும் அவர் தொடர்ந்து அழைத்துள்ளார். இதற்கு பதிலளித்த காவலர் ஒருவர் ஸ்டேசன்ல ஆள் இல்லை. உங்களுக்கு பாதுகாப்பு வேணும்னா காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் என தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு என்ன காரணம்?
பல்லடத்தில் குடித்து விட்டு நடுரோட்டில் போலீசாரிடம் தகராறு செய்ததை, நியூஸ்7 தமிழில் செய்தி வெளியிட்டது; செய்தி வெளியானால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மர்ம நபர்கள் மிரட்டிய நிலையில் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதவிர சட்டவிரோத மதுக்கடை தொடர்பாகவும் அவர் செய்தி சேகரித்திருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த அந்த கும்பல், தற்போது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
மாமூலுக்கு ஆசைப்பட்டு போலீஸ் மெத்தனம்?
பொதுவாக பல்லடம் காவல்துறையினர் பலரிடமும் மாமூல் வாங்கிக் கொண்டு சட்டவிரோத செயல்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நிருபர் மீதான தாக்குதல் அதை நிரூபிப்பதாகவே உள்ளது. பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினரின் செயல்பாடு மொத்தத்தில் பூஜ்ஜியம் என்பதால், இங்கு எல்லாவிதமான சட்டவிரோதச் செயல்களும் தங்குதடையின்றி நடப்பதாக, பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் இங்குள்ள பார்கள், குவாரி உரிமையாளர்களிடம் காவல்துறையினர் மாமூல் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்கு விசுவாசமாக இருப்பதும்தான் என்று கூறப்படுகிறது. செய்தியாளர் புகார் கொடுத்துகூட காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளனர் என்றால், சாதாரண அப்பாவி மக்களின் புகார்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.

திருப்பூர் எஸ்பி சொல்வதென்ன?
பல்லடத்தில் நிருபர் மீதான தாக்குதல் குறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, “நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மர்ம நபர்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட வேண்டி இருக்கிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேற்கொண்டு எந்த தகவலும் தெரிவிக்க இயலாது. நிச்சயமாக விரைந்து குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள்” என்றார்.
திருப்பூர் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
செய்தியாளர் நேசபிரவை சரமாரியாக வெட்டி,கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை அரசும், காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சமுக விரோத கும்பல்கள் பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களை தாக்கும் அவலம் தொடர்வது ஊடக சுதந்திரத்திற்கு பேராபத்து என்பதால் இவர்களை கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.







