கொலை வழக்கு கைதி தப்பி ஓட்டம்..!உடனடியாக தூக்கிய போலீஸ் !!!
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடினார். அவரை துரிதமாக செயல்பட்ட போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயதான ஹேம் சாகர் நாயக். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இவர் தனது நண்பரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வந்த நிலையில் இன்று அவரை மீண்டும் கைது செய்தனர் காவல் துறையினர்.இதனை தொடர்ந்து அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







