மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை வசூலிக்க வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நிலையில் விஜய் மல்லையா லண்டன் தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பான வழக்கு சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் மல்லையாவை நாடு கடத்த கோரும் வழக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று கடனை வசூல் செய்து கொள்ள வங்கிகளுக்கு மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்றம் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதாக அமலாக்கத்துறை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை விஜய் மல்லையா திருப்பி செலுத்தாத நிலையில் அவர் மீது திவால் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்திய வங்கிகள் லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.






