ம.பி.யில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது..! ஆட்சியை தக்க வைக்குமா பாஜக..!
பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி நிலைக்குமா என்ற கேள்வியோடு மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியும் நிலைக்குமா என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்க உள்ளது. பீகார் தவிர பிற 11 மாநிலங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
இதில் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு பாஜக குறைந்தது எட்டு இடங்களில் வென்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது.
இங்கு ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவிற்கு மாறினார். ராஜினாமா செய்தவர்கள் இம்முறை பாஜக சார்பில் களமிறங்கி இருந்தனர்.
இதுதவிர உத்திரபிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகளும் யோகி ஆதித்யநாத் அரசின் மீது மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும். இவை தவிர குஜராத்தில் 8, மணிப்பூரில் 4, கர்நாடகாவில் 2 தொகுதிகள் உட்பட 24 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.






