--- --:--:-- --

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை..!

1

சென்னை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்த நிலையில், புதுச்சேரியில் பெய்த கனமழையால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாத நிலையில், பனிமூட்டம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் நேற்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

 

புறநகர்ப் பகுதிகளான ஆலந்தூர், விமான நிலையம், மீனம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கியதால், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுவரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. மாலை 6 மணிக்கு மேல், கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதி மட்டுமன்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கல்வராயன் மலைப் பகுதியில், மழை நின்றதும், பனிமூட்டம் தொடங்கியது. சாலையில் வாகனங்கள் தெரியாததால், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்துசென்றன.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் கனமழை பெய்தது. பெரம்பலூர் நகர்ப்பகுதி மட்டுமன்றி, பேரளி, சித்தெளி, செங்குணம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, அங்கனூர், சிவராமபுரம், சன்னாசிநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குழுமூர் வனப்பகுதியில் பனிமூட்டமாக காணப்பட்டது.

Right Menu Icon