ம.நீ.ம முதல்கட்ட வேட்பாளர்கள்.. மார்ச் 10 வெளியிடுகிறார் கமல்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், மார்ச் 10ம் தேதி வெளியிடுகிறார். அத்துடன், சமக உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு விவரமும் வெளியாகும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதிப் பங்கீடுகள் பெரும்பாலும் நிறைவு கட்டத்தை எட்டி, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, வேட்பாளர்கள் விவரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.
வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதில், வழக்கம் போல் இம்முறையும் அதிமுக முந்திக் கொணது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக, நேற்று வெளியிட்டனர்.
இச்சூழலில், இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாளை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 10ம் தேதி வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
இப்பட்டியலில் கமல்ஹாசன், கவிஞர் சினேகன், டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதை உறுதி செய்வது போல், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசனுடன் ரவி பச்சமுத்து, சரத்குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மக்கள் நீதி மய்யம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி இடையே நாளைக்குள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமாகும் என்றனர்.





