--- --:--:-- --

அதிமுக அணியில் தான் இருக்கிறோம்… ஓரிரு நாளில் தொகுதி உடன்பாடு: தேமுதிக தகவல்

EPS vijayakanth

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடர்கிறது, 23 தொகுதிகள் என்றளவுக்கு நாங்கள் இறங்கி வந்துள்ளோம்; ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு முடியும் என்று, தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

 

அதிமுக கூட்டணியில் இன்னமும் தேமுதிக, தமாகா- உடன் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக அணியில் தேமுதிக தொடருமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இழுபறியில் இருந்த அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு, தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.

 

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் கொடுக்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 41 தொகுதிகள் என்ற நிலையில் இருந்து 28 தொகுதிகள் பின்னர் 25 தொகுதிகள் என்று தேமுதிக இறங்கி வந்த நிலையில் தற்போது 23 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டு வருகிறது.

 

இதனிடையே, தொகுதிப்பங்கீடு தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக-தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் அதிமுக சார்பாக வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அக்பர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

இதன் முடிவில், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அதிமுக அணியில் தொடர்கிறோம். எங்களது தொகுதி எண்ணிக்கையை 23 என்றளவுக்கு இறங்கி வந்திருக்கிறோம். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணியில் சலசலப்பு இல்லை.

 

கூட்டணியில் மற்ற பெரிய கட்சிகளும் இருப்பதால், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என அதிமுக தெரிவித்துள்ளது. அதிமுகவைத் தவிர வேறு யாருடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 2 நாட்களில் சுமுகமாக முடியும் என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon