ஆண்களே இங்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் – நடிகர் ரவி மோகன்
தனது வலைதள பக்கத்தில் நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. யாருக்காக அந்தப் பதிவு வெளியிட்டுள்ளார்? ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி மோகன்.
பல வித்தியாசமான கதைகளத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் பிடித்துள்ள ரவி மோகன் ஜூன் 20 உடன் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.தற்போது டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அரசியல் பின்னணியில் கராத்தே பாபு என்ற தலைப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் நடிகர் ரவி மோகன் வலைதளத்தில் தற்போது வெளியிட்ட பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் “நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு ரவி மோகன் பகிர்ந்துள்ளதில், “உங்களுக்குத் தோன்றியதை மீண்டும் பேசுங்கள், பெண்கள் மட்டுமே எப்போதும் சரி என்று நீங்கள் நம்புகிறீர்கள். உண்மையில் ஆண்களே இங்கு அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
அதை நம் நீதித்துறையும் உணர்ந்துள்ளது. ஒரு நாள் என் மனதையும், என் அன்புக்குரியவர்களுக்காக நான் செய்த தியாகங்களையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஒரு மனிதனை நிம்மதியாக வாழவிடுங்கள்; உங்கள் கசப்பான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.





