தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெறுகிறது..!
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது. தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 405 மருத்துவர் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.இதற்காக 39 ஆயிரத்து 723 பேர் விண்ணப்பித்த நிலையில் 37 ஆயிரத்து 973 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ ஜன் 710 மதிப்பெண்கள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் .
இதைப்போல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 313 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்காக 951 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கான பிரத்யேக தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் தேனி அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் 664 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 750 எம்பிபிஎஸ் இடங்கள்,1954 பிடிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
கொரொனா காரணமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஒரு நாளுக்கு 500 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.






