--- --:--:-- --

தொகுதிகள் போதாது… அதிருப்தியில் மார்க்சிஸ்ட்! இன்று மாலை முக்கிய முடிவு!

Marxist dmk 01

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை திமுக தலைமையுடன் பேச்சு நடத்திய மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றனர். அடுத்த கட்ட முடிவு குறித்த், இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.

 

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தமிழக அரசியல் களத்தில் இன்னமும் தெளிவில்லாத நிலையே காணப்படுகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – அதிமுக அணியில் இன்னமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; தொகுதி எண்ணிக்கையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

 

திமுக கூட்டணியில் இதுவரை விசிக, முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளது. மதிமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பல கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு செய்து கொள்ள முடியாமல் திமுக தலைமை தவிக்கிறது. அடுத்த ஓரிரு நாளில் எல்லாவற்றையும் முடித்தாக வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது.

 

இந்த சூழலில், தொகுதிப்பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திமுக ஒதுக்க முன்வந்த 6 தொகுதிகளை ஏற்க மறுத்ததோடு, 12 தொகுதிகள் தேவை என்றனர். இதை திமுக ஏற்கவில்லை. இதனால், ஒரு மணி நேரம் வரை நீடித்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டவில்லை.

 

இதையடுத்து, மார்க்சிஸ்ட் தலைவர்கள் அறிவாலயத்தில் இருந்து கிளம்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன், திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலை நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.

 

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஏற்க மறுத்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon