குமரி மக்களவைத்தொகுதியில் மீண்டும் பொன்னார் நிறுத்தம்! அறிவித்தது பாஜக
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி காலமானார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில், வரும் ஏபரல் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் குமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் அங்கு வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட, எச்.வசந்த்குமாரின் மகன் விஜய் வசந்த் சென்னை சத்யமூர்த்திபவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





