--- --:--:-- --

மணலூர் அகழாய்வில் சங்க கால அடுப்பு கண்டறியப்பட்டுள்ளது!

மணலூர் அகழாய்வில் சங்க கால அடுப்பு கண்டறியப்பட்டுள்ளது!

கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக நடைபெறும் மணலூர் அகழாய்வில் என்று சங்க காலத்தை சேர்ந்த அடுப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில தொல்லியல் துறைகள் மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத் தொல்லியல் துறை இப்பகுதிகளில் தொடர் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த முறை கூடுதலாக கீழடி மட்டுமன்றி கொந்தகை அகரம் மணலூர் ஆகிய பகுதிகளும் அகழாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

கீழடி மற்றும் கொந்தகையில் ஆறாம் கட்ட அகழாய்வின் தொடக்கத்திலேயே பணிகள் தொடங்கிய நிலையில் அகரத்தில் ஒரு சில வாரங்களுக்கு பிறகு அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறத் தொடங்கின. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தன. இதனையடுத்து கீழடி கொந்தகை அகரத்தில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

 

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு குறைந்த அளவு பணியாளர்களை கொண்டு அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கின.மணலூர் பகுதி கடந்த மே 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.மணலூர் அகழாய்வில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அங்கே ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.இன்றைய அகழாய்வு பணியின்போது சங்ககாலத்தை சேர்ந்த அடுப்பு போன்ற கட்டுமானம் ஒன்று வெளியே தெரிய தொடங்கியதையடுத்து அங்குள்ள பணியாளர்கள் கவனமாக அகழாய்வு செய்து வெளிக் கொணர்ந்தனர்.

 

தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கட்டுமான உலை அல்லது அடுப்பு போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளது. சங்க காலத்தில் இது போன்ற பயன்பாடு அங்குள்ள மக்களிடம் இருந்துள்ளது என்பதற்கு கடந்த முறை இங்கு நடைபெற்ற அகழாய்வுகளே சான்று.மத்திய தொல்லியல் துறையால் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் இது போன்ற கட்டுமானங்கள் நிறைய கிடைத்தன. தற்போது ஆறாம் கட்டத்திலும் அதே போன்ற வடிவமைப்பு கிடைத்துள்ளது இப்பகுதியில் ஒரே மாதிரியான கலாச்சாரம் நிலவியுள்ளதாக அறிய முடிகிறது.

Leave a Reply

Right Menu Icon