--- --:--:-- --

கொல்கத்தா டெஸ்டில் கோஹ்லி சதம் விளாசல்; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராட்டம்

images (1)

கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவுப் போட்டியாக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், கேப்டன் கோஹ்லியின் சதத்தால் இந்தியா அபார முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சிலும் தடுமாறும் வங்கதேசம், இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

 

இந்தியா வந்துள்ள வங்கதேச அணியுடன் 3 போட்டி கொண்ட டி20 தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி கண்டது.

 

தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே மோதும் முதல் போட்டி இது என்பதால், போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டினர் .அது மட்டுமின்றி இந்தப் போட்டியைக் காண வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் மைதானத்தில் குழுமினர்.

 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த முதல் பகலிரவு போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வங்கதேச அணி 106 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்தது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கோஹ்லி சதம் விளாசி 136 ரன்களில் அவுட்டானார். பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றார்.

 

ரஹானே (51) அரைசதம் எடுத்து அவுட்டானார். மற்ற இந்திய வீரர்கள் யாரும் சோபிக்காத நிலையால், 347 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனால் முதல் இன்னிங்சில் 241 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசத்துக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார் இஷாந்த் சர்மா. அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தடுமாறி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 13 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி தட்டுத்தடுமாறியது. அதன் மகமதுல்லாவும், ரஹீமும் ஜோடி சேர்ந்து அணியின் வீழ்ச்சியை ஓரளவுக்கு தடுத்தனர்.39 ரன்கள் எடுத்திருந்த போது மகமதுல்லா காயம் காரணமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

 

அதன் பின் மேலும் 2 வீரர்கள் அவுட்டாக 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரஹீம் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கவே வங்கதேச அணிக்கு 89 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் நாளைய 3-வது நாள் ஆட்டத்தில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராட வேண்டியுள்ளது.

 

அதே வேளையில் இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தான் ஆடிய முதல் பகலிரவுப் போட்டியில் வெற்றி பெற்ற சாதனையுடன், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சாதனையையும் படைக்க உள்ளது இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon