--- --:--:-- --

நாட்டையே உலுக்கும் கிசான் விகாஸ் “கோல்மால்”..! அதிகாரிகளின் வேட்டையால் தமிழக இமேஜ் “டமால்’!!

xv

த்திய அரசு திட்டம் ஒன்றில் தமிழகத்தில் நடந்துள்ள மெகா முறைகேடு, இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரொனாவை பயன்படுத்தி விவசாயிகளுக்கான கிசான் விகாஸ் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள், பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

சிறுகுறு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில், குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு, ரூ.6000 நிதி உதவி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் பெயர், பிரதம மந்திரி கிஸான் திட்டம் என்பதாகும். இதில் சேர வேண்டுமானால் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, ஐந்து ஏக்கர் வரை மட்டுமே நிலம் வைத்திருக்க வேண்டும்; பயனாளிகள் வருமானவரி செலுத்துபவர்களாக இருக்க கூடாது.

 

இதில் இணைய விரும்புவோரின் பட்டா, சிட்டா சான்றிதழ்கள், சர்வே எண்கள் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார். அந்தச் சான்றிதழுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை இணைத்து வட்டார வேளாண்மை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், இதற்கு குடும்ப அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

 

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் தமிழக வேளாண்துறை மூலமாக முதற்கட்டமாக 25 லட்சம் குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகள் மூலம் நிதி வழங்கப்பட்டது. அதேநேரம், இந்த திட்டத்தில் விவசாயிகள் இன்னும் எளிதாக பலன் அடைய வேண்டுமென்ற நோக்கில், மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. அந்த திருத்தங்களே, தற்போது தமிழகத்தில் பெரும் முறைகேட்டுக்கு காரணமாகிவிட்டது.

 

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதிலாக, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேளாண்மை அதிகாரிகளே பயனாளிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு, இதற்கான விதியில் திருத்தம் செய்தது. அதை தொடர்ந்து, வேளாண்துறை அதிகாரிகள் பலர், ஆதார் மற்றும் குடும்ப அட்டையுடன் தலைக்கு 500 ரூபாய் கமிஷன் கொடுத்தால், ஆறாயிரம் ரூபாய் பெற்று தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டு வசூலித்துள்ளனர்.

விவசாயி என்ற பெயரில் போலி நபர்களைப் பதிவேற்றம் செய்து ஏராளமான பணத்தை முறைகேடாக பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான நலிவடைந்த விவசாயிகளுக்கு போய்ச்சேர வேண்டிய தொகையை, அதிகாரிகள் சிலர் ‘கோல்மால்’ செய்து, தகுதிவாய்ந்த விவசாயிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகள் அல்லாதவர்களை, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை போலியாக சேர்த்துள்ளனர்.

 

கடலூர் மாவட்டத்தில் 36,500  போலி கணக்குகள்

 

இந்த முறைகேடு முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில் அம்பலமானது. அங்குள்ள காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு கிராமத்தில், 300 பேரின் ஆதார் அட்டை விவரங்களை முறை கேடாகப் பயன்படுத்தி, ஒருவர் விண்ணப்பித்துள்ளார். பின்னர், வீடுவீடாகச் சென்று கமிஷன் கேட்டுள்ளார். இந்தத் தகவல் உண்மை பயனாளியான விவசாயிகளின் காதுக்கு போய்ச்சேரவே, குட்டு வெளிப்பட்டது.

 

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 பேர் பதிவு செய்துள்ள நிலையில் 36,500 கணக்குகள் போலி என தெரிய வந்துள்ளது. அந்த கணக்குகளில் இருந்து 5.60 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 90 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை சமர்பித்தும், விண்ணப்பத்தில் தில்லுமுல்லு செய்தும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக, சேலம் மாவட்டத்தில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியற்ற வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 74.000 போலி கணக்குகள் 

 

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 70,000 கணக்குகளில் 42,000 கணக்குகள், கள்ளக்குறிச்சியில் பதிவு செய்யப்பட்ட 75000 கணக்குகளில் 74000 கணக்குகள் போலி என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சியில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக வேளாண்துறை பரிந்துரைத்தது. கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணையில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திருவாரூர் என, முறைகேடு நடந்த மாவட்டங்களின் பட்டியல் நீள்கிறது.


ரூ.110 கோடி முறைகேடு

 

தமிழக அளவில் கிசான் விகாஸ் திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேரை போலியாக சேர்த்து, ரூ.110 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள், ஆளும் அதிமுக அரசு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளன. விவசாயிகளுக்குப் போக வேண்டிய தொகையை, ‘போலி நபர்கள்’ கொள்ளையடிக்க, ஆட்சியாளர்கள் துணை போயிருப்பதாக, ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், முதல்வர் பழனிச்சாமி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். “விண்ணப்பங்களை நேரடியாக பிஎம் கிசான் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதித்ததுதான் முறைகேட்டிற்குக் காரணம்” என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, மத்திய அரசின் பக்கம் கையை காட்டிவிட்டார்.


தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு

 

நாட்டின் முதுகெலுப்பாக இருப்பவர்கள், விவசாயிகள். அந்த விவசாயிகளோ பருவமழை பொய்த்தும், அல்லது பருவம் தவறி பெய்யும் மழையால் விளைச்சல் இல்லாமல் பல்வேறு சோதனைகளை காலம்காலமாக அனுபவித்து வருகிறனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு கொண்டு வந்த நிதிஉதவி திட்டத்தில் மனசாட்சியே இல்லாமல் அதிகாரிகள் இவ்வாறு முறைகேடு புரிந்திருப்பது, பலரையும் ஆச்சரியமும் ஆவேசமும் கொள்ளச் செய்துள்ளது. இந்த விவகாரம், அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அரசு கொண்டு வரும் திட்டங்கள் நன்றாக இருந்தாலும், அதை மல்படுத்துவம் போது ஊழல், முறைகேடுகள் தலை தூக்குகின்றன. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். அவர்களின் பதவியை பறிப்பதோடு, முறைகேடு தொகையைவிட பல மடங்கு அபராதம் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்; முறைகேடுகள் எதிர்காலத்தில் குறையும் என்பது சமூக ஆர்வலர்கள், விவசாயிகளின் கருத்தாகும்.

Leave a Reply

Right Menu Icon