கவின் ஆணவக் கொலை – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை
கவின் ஆணவக் கொலை தொடர்பாக பரவும் வீடியோ தவறானது என தெரிவித்துள்ள நெல்லை மாநகர காவல்துறை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் சரணடைந்தார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கவின் செல்வகணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஒரு சில நபர்களால் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கு பற்றி சமூக வலைதளங்களில் தவறான வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 27.07.25 ம் தேதி திருநெல்வேலி மாநகரம்,பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஒரு சில நபர்களால் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
மேற்படி காணொளியில் உள்ள சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றது ஆகும். மேலும் அந்த காணொளிக்கும் திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இதுபோன்று சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிரும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.





