கருணாநிதி திமுக.. இப்போது பிரசாந்த் கிஷோர் திமுக..! தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை.. பி.கே. ஸ்டாலின்…! அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!
பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்ததால் கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாகி விட்டது. அதன் கட்சித் தலைவரும் மு.க.ஸ்டாலின் இல்லை; பி.கே (பிரசாந்த் கிஷோர் சுருக்கம்) ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வர இருக்கும் சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்க பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் இந்த நிலைப்பாட்டை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கிண்டல், கேலி செய்து விமர்சித்து வருகின்றன. திமுகவில் அறிவுப் பஞ்சம், கொள்கைப் பஞ்சம் வந்துவிட்டது போலும் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பிரசாந்த் கிஷோரை நியமித்ததால் திமுக இப்போது கருணாநிதியின் திமுக இல்லை: பிரசாந்த் கிஷோர் திமுக வாக மாறிவிட்டது. திமுக தலைவரும் மு க ஸ்டாலின் இல்லை; பி.கே. (பிரசாந்த் கிஷோர்) ஸ்டாலின் என விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தூண்டுதல்கள் காரணமாகவே அமைதியாக உள்ள தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களின் போராட்டங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமியர்கள் போராட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





