கலவர பூமியான கணியாமூர்: பள்ளி மாணவியின் மரணத்தால் கொந்தளிப்பு.. ‘கோட்டை’ விட்ட போலீசாரால் அரசுக்கு தவிப்பு!
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்கூட்டியே போலீசார் கண்டறித்தவறியதால், தமிழக அரசுக்கு பெரும் சங்கடம் உண்டாகி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறது. இதன் தாளாளராக இருப்பவர், ரவிக்குமார். இவர், பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
கணியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்து வந்துள்ளார். பள்ளி வளாகத்திலேயே செயல்படும் ஹாஸ்டலில், கடந்த ஜூலை 1ம் தேதிதான் அந்த மாணவி ஹாஸ்டலின் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், ஜூலை 13ம் தேதி காலை 6 மணிக்கு மாணவியின் பெற்றோரை பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கொண்டு, மாணவி பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார் என்றும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், மாணவி இறந்துவிட்டார் என்ற தகவலும் வந்துள்ளது.

இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தங்களது மகளின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். கீழே குதித்திருந்திருந்தால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்; ஆனால் அப்படி எந்த காயமும் இல்லை என்று உறவினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அத்துடன், மாணவி கீழே குதித்ததாக கூறுகிறீர்களே, அது தொடர்பான சிசிடிவி வீடியோ பதிவை காட்டுங்கள் என்று, பெற்றோர் தரப்பில் கேட்டதற்கு, பள்ளி நிர்வாகம் தரப்பில் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, பிரேத பரிசோதனைக்காக மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, மாணவியின் மரணம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் அதனை ஏற்றுக்கொண்டாலும், உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறு, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில், பள்ளியின் முன்பும், பின்னர் மாணவியின் சொந்த ஊரான வேப்பூரிலும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். உறவினர்களை சமாதானப்படுத்த, ஜூலை 14ம் தேதி வேப்பூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், அது தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்தது.
இதற்கு மத்தியில், பள்ளி மாணவியின் இறப்புக்கு நீதி வேண்டும் என கோரி மாணவியின் பெயர், புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பதிவுகள் பகிரப்பட்டன. ட்விட்டர் வலைதளத்தில் மாணவியின் பெயரில் ஹேஷ்டேக் பரப்பப்பட்டன. உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாபெரும் போரட்டம் நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கியது. அப்போதாவது காவல்துறையோ, உளவுத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ விழித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி செயல்பட்டிருந்தால், தமிழக அரசுக்கு இந்த தர்ம சங்கட நிலையோ, பள்ளிச் சொத்துக்கு சேதமோ ஏற்பட்டிருக்காது.
இந்நிலையில் தான், போராட்டத்தின் 4வது நாளான ஜூலை 17ம் தேதி, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கானவர்கள், காலை 9 மணியளவில் பள்ளி முன்பு திரளத் தொடங்கினர். ஆரம்பத்தில் அப்பகுதியில், குறைந்த எண்ணிக்கையில்தான் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து நிறுத்தி, சமாதானப்படுத்த முற்பட்டனர். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் போராட்டக்காரர்கள் ஆவேசமுடன் முழங்கியபடி முன்னேறினர். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்பதை போலீசாரும், உளவுத்துறையும் கணிக்க தவறியதன் விளைவு, அங்கு சற்று நேரத்தில் பெரும் வன்முறை மூண்டது.
போராட்டக்காரர்களில் திடீரென சிலர் பள்ளியின் நுழைவு வாயிலில் இருந்த சுவற்றில் ஏறினார். அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றபோது, தடுப்புகளை மீறி பள்ளிக்குள் நுழைந்தனர். போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயன்றனர்.
நிலைமையை கட்டுப்படுத்த போலீசார், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களில் பலர், வன்முறையில் இறங்கினர். பள்ளி வளாகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்ததோடு பேருந்துகள் மீது டிராக்டர்களை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் வாகனங்கள் உள்பட10க்கும் மேற்பட்ட வாகனங்களை தீவைத்து எரித்தனர். தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்து சூறையாடினர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் உட்பட 25 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்து அதிகளவில் மக்கள் குவிந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசாரும் ஆயிரக்கணக்கில் வரவழைக்கப்பட்ட நிலையில், பகல் 2 மணியளவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.
பள்ளி வளாகத்தில் அரங்கேறிய வன்முறை காட்சிகள் டிவியில் நேரலையில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்க, பார்த்தவர்கள் பதைபதைத்தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள், பள்ளியின் உடமைகள், டேபிள் சேர் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
பிரம்மாண்ட அளவில் நடந்த போராட்டத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று, இறந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்தாலும், பள்ளி வாகனங்கள், மாணவ- மாணவியரின் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது கொடுமையின் உச்சம். அடித்து நொறுக்கப்பட்ட பள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம். இது, பல ஆயிரம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம். அதை போராட்டக்காரர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
மாணவியின் மரணம் தொடர்பாக, சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் (48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி (44), பள்ளி முதல்வர் சிவசங்கரன் (57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா (40), கணித ஆசிரியை கீர்த்திகா (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், வன்முறை தொடர்பாக 350 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, பள்ளி கலவர வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு, உள்துறை செயலர் பணிந்திரரெட்டி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்படி, சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவில் தான், மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும்; உண்மை தெரிய வரும். அதுவரை அனைவரும் அமைதி காப்பதே இறந்த மாணவிக்கு செய்யும் அஞ்சலியாகும்.

கள்ளக்குறிச்சி கலவரம் – ஹைலைட்ஸ்!
மாணவியின் கடிதம்!
கணியாமூர் பள்ளியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மாணவி இறந்துள்ள நிலையில், அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய சைலேந்திர பாபு!
பள்ளி மாணவி மரண வழக்கில், டிஜிபி சைலேந்திர பாபு முதலில் கருத்து தெரிவிக்கும் போது பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது தவறு இருப்பதாக தெரியவில்லை. சிபிசிஐடி விசாரணை தேவையில்லை என்றார். சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை தொடங்கும் முன்பே அவர் இவ்வாறு கூறியது விமர்சனங்களை கிளப்பியது.
அத்துடன், பள்ளித் தாளாளருடன் சைலேந்திரபாபு எடுத்துக் கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். நிலமை விபரீதமான பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு அவரே உத்தரவிட்டார்.

அதிமுகவினர் கைது!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக, 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் செய்தவர்கள் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். மேலும், கள்ளக்குறிச்சி கலவரத்தில் வன்முறையை துண்டியதாக பெரம்பலூர் மாவட்ட அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த தீபக், சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைதானவர்கள் மீது, 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதானவர்களில் 30 பேர், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். விழுப்புரத்தில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செஞ்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.

நீதிமன்றம் சென்ற வழக்கு!
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரி அவரது தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக, தந்தை தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, தகுதியில்லாத மருத்துவர்கால் என எப்படி சொல்லலாம்? நீங்கள் நிபுணரா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்தலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவர்களை நீதிமன்றமே நியமிக்கும். அனைத்தும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மாணவி உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என்று, உச்சநீதிமன்றமும் தெரிவித்துவிட்டது.

பள்ளி செயலாளரின் வீடியோ!
மாணவி மரணம் தொடர்பான வழக்கில், சக்தி மெட்ரிக் பள்ளி செயலாளர் சாந்தி கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “மாணவி தற்கொலை செய்துகொண்ட நாளில் இருந்து பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். எதையும் மறைக்கவில்லை. மாணவியின் தாயார் எங்களை பார்க்க முயற்சித்ததாக கூறுகிறார். அப்போது நாங்கள் போலீஸ் பாதுகாப்பில் இருந்தோம். நாங்கள் எங்கேயும் போகவில்லை.
நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது ஏன் இப்படி வன்முறையை பரப்ப வேண்டும். மாணவர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டுள்ளது. இது அனைத்திற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசியுள்ளார்
பள்ளி சங்கங்கள் ஆவேசம்!
கள்ளக்குறிச்சி பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து , அடுத்த நாளே தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என, தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அதிரடியாக அறிவித்தார்.
அதே நேரம், அரசு விதிகளை மீறி விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்தது. பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கினாலும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகள் அடுத்த நாள் செயல்படவில்லை.
அமைச்சர் சொல்வது என்ன?

கனியாமூர் பள்ளி வன்முறை குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘தனியார் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, மீண்டும் அப்பள்ளி இயங்க 2 மாதங்கள் ஆகலாம். எனவே மாணவர்கள் நலன் கருதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களை அரசுப்பள்ளிகள் மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு டிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் அனுமதியில்லாமல் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அளிக்கக் கூடாது. மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.





