--- --:--:-- --

“பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா!!” நான் பார்த்த காங்கிரஸ் இப்போது இல்லை என காட்டம்!!

1

காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்து விட்டார். இதனால் ம.பி.யில் காங்கிரஸ் அரசும் கவிழ்வது உறுதியாகியுள்ளது.

 

காங்கிரசில் பலம் மிக்க இளம் தலைவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா, ம.பி. அரசியலில் முதல்வர் கமல்நாத் தான் ஓரங்கட்டப்பட்டதால் திடீரென போர்க்கொடி உயர்த்திய சிந்தியா, நேற்று டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்தார். தொடர்ந்து காங்கிரசில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

 

இதனால், சிந்தியா பாஜகவில் இணைவது உறுதி என்றும், ம.பி.மாநில காங்கிரஸ் அரசும் கவிழும் அபாயத்துக்கு சென்று விட்டது என்றும் அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவியது. அதற்கேற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் பெங்களூருவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். எஞ்சியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பத்திரப்படுத்த 95 எம்எல்ஏக்கள் ராஜஸ்தானுக்கு பேக்கப் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், எதிர்பார்த்தது போலவே, ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்து விட்டார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சிந்தியா, பாஜகவில் இணைந்தார். பின்னர் பேசிய சிந்தியா, நான் முன்னர் பார்த்த காங்கிரஸ் இப்போது இல்லை. இதயம் போல் நினைத்த என் ம.பி.மாநிலத்துக்கு, கடந்த 18 மாதங்களில் என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. இதனாலேயே ம.பி. மக்களுக்கு நன்மை செய்ய பாஜகவில் இணைந்தேன் என்றார்.

 

ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்த தன் மூலம் ம.பி.யில் ஆளும் காஙகிரஸ் அரசுக்கு நெருக்கடி மேலும் முற்றியுள்ளது. இதனால் அங்கு, கர்நாடகாவில் நடந்தது போல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சியை வசப்படுத்துவது ஓரிரு நாட்களில் அரங்கேறும் என்றே தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon