ஜூன் 30ம் தேதி வரை ஜூம்மா மசூதியை மூட உத்தரவு!
டெல்லி ஜும்மா மசூதிக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை மூடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து இன்று அதிகாலை அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டன.
வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்ட நிலையில் பெருமளவில் கூட்டம் கூடியதால் ஜும்மா மசூதியில் கொரொனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் ஏராளமான இஸ்லாமியர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மருத்துவர்களுடனும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து ஜூன் 30-ஆம் தேதி வரை மசூதியை மூட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
மசூதிக்குள் ஐந்து நேர தொழுகை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜும்மா மசூதி பின்பற்றி டெல்லியில் உள்ள இதர மசூதிகளும் முப்பதாம் தேதி வரை மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.






