அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் – முதலமைச்சர்
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கவுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர அரங்கம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களாக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
இங்கு, பிரமாண்ட நுழைவு வாயில், வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மருத்துவமனை, காளைகள் சிற்பக்கூடம் என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாடுவதற்கான களம் அரைவட்ட வடிவில் 500 அடி பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நேரத்தில் நான்காயிரத்து ஐநூறு பேர் போட்டிகளை பார்த்து ரசிக்கலாம்.
இந்த அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்தப்பின், ஜல்லிக்கட்டு போட்டியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டி நடத்தப்படவுள்ளது.
அதற்காக 500 மாடுகளுக்கும், 300 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத காலங்களில் பிற விளையாட்டு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் அரங்கில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






