ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை.. அடுத்தகட்ட விசாரணை!
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் உடல் 5 நாட்களுக்குப் பின் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டை உலுக்கிய கோர சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணையைத் துவக்கிய நிலையில், அடுத்தடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும்?.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில், கவின் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித் சரணடைந்தார். பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், சுர்ஜித்தின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் – கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த புதன்கிழமை உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து கவின் வீட்டிற்கு சென்று அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
இதற்கிடையில் அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாகவும் சரவணன் கைது செய்யப்பட்டதாலும் கவின் உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர். அதன்படி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் கவினின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, கொலை செய்யப்பட்ட கவினை நெல்லை பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு மாநகர காவல் துறை மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கொலை சம்பவத்திற்கு முன்பாக கவினை பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் அழைத்து மிரட்டியதாக கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்தது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளது.





