--- --:--:-- --

வைகோ கை சுத்தமா? ரூ.250 கோடி சொத்து புகாரால் மதிமுகவில் சலசலப்பு.. மல்லை சத்யா மனசாட்சி இத்தனை நாள் தூங்கியதா?

fdhdhd

மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ள, ரூ.250 கோடி சொத்து குறித்த புகார், வைகோவின் கை சுத்தம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. இத்தனை ஆண்டு கால வைகோவின் அரசியல் பிம்பத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பின்போது மல்லை சத்யா வீசிய அணுகுண்டுகளில் முக்கியமானது, சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு. “வைகோ குடும்பத்துக்குச் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு சொத்துகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கினார்கள். இப்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் அரண்மனை போன்ற ஒரு வீட்டைப் புதிதாகக் கட்டி, போன வாரம்தான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளனர்!” என்று மல்லை சத்யா பகீர் கிளப்பினார்.

 

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், ‘தியாகத்தின் அடையாளம்’, ‘கை சுத்தம், வாய் சுத்தம்’ என நம்பி வந்த வைகோவின் தொண்டர்கள் மத்தியில் இந்த ஆடம்பரப் பங்களா குறித்த செய்தி பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கொள்கை பேச்சும் வைகோ, அரசியலில் இவ்வளவு கெட்டிக்காரர் ஆகிவிட்டாரா?’ என்று அரசியல் வட்டாரத்திலும் புருவங்கள் உயர்ந்து நிற்கின்றன.

 

மல்லை சத்யா, துரை வைகோவை ஒரு பிடிபிடித்தார். “துரை வைகோ கடந்த 28 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்? குடும்பத்தை எல்லாம் செட்டில் செய்துவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் திடீரென ‘பாரசூட்டில்’ தலைமைக்கு வருவதை ஏற்க முடியாது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்யாமல், வியாபாரம் செய்து வந்தவர்தான். ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் பாரம்பரியம், துரை வைகோவுக்கு இல்லை,” என்று காட்டமாகக் கூறினார்.

 

மேலும், வைகோவின் மது எதிர்ப்பைப் பற்றியும், “தி.மு.க. கூட்டணியில் இத்தனை ஆண்டுகள் வைகோ ஏன் அமைதியாக இருந்தார்? ம.தி.மு.க. இருக்கிறது என்ற பிம்பத்தைக் காட்டவே இப்போது அவர் நடைப்பயணம் போகிறார்” என்று கடுமையாகச் சாடினார்.

மல்லை சத்யாவின் அரசியல் விமர்சனம் இத்துடன் நிற்கவில்லை. “பா.ஜ.க.வுடன் இணைந்து துரை வைகோவிற்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்கிற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக, வைகோ பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட நினைத்தார், அது நடக்காமல் போகவே தி.மு.க. பக்கம் வந்தார்,” என்று மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 

அத்துடன், “அன்புமணியை நினைத்து இப்போது ராமதாஸ் வருந்துவதைப் போல, ஒரு நாள் நிச்சயம் வைகோவும் வருத்தப்படுவார். சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுத்தவர் வைகோ,” என்று கூறியது, கட்சியின் அரசியல் எதிர்காலத்தைக் குறித்த கவலையாகவே பார்க்கப்படுகிறது.

 

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வைகோ உடனடியாகவும் மிகக் கடுமையாகவும் பதிலடி கொடுத்தார். “மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். எனது நேர்மையை இந்த உலகம் அறியும். அரசியல் எதிரிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது,” என்று மறுத்த வைகோ, மல்லை சத்யாவை “ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு” என்றும் கடுமையாக விமர்சித்தார். இரு தரப்புக்கும் இடையேயான வார்த்தைப் போர், அரசியல் அரங்கில் பொதுச் சொத்து மோதலாக மாறியதுதான் ம.தி.மு.க.வின் இன்றைய சோகம்.

 

ஆனால், இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பும் கேள்வி மிகவும் நியாயமானது. கட்சியைவிட்டு நீக்கியதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் மல்லை சத்யா, இத்தனை ஆண்டுகள் வைகோவுடன் இருந்தாரே?

 

“தனக்குப் பதவி கிடைக்காதவரை, வைகோவின் மகன் துரை வைகோவின் ‘பாரசூட்’ வரவை விமர்சிக்காத மல்லை சத்யா, சொத்து குவிக்கும் ரகசியங்களை எல்லாம் கண்ணால் பார்த்து, அனுசரித்துக்கொண்டு வாய்மூடிதானே இருந்தார்? அப்போது அவரது மனசாட்சி தூங்கிக்கொண்டிருந்ததா?” என்று ம.தி.மு.க-வைச் சேர்ந்த பலர் பகிரங்கமாக விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்று வரை கண்கூடாகப் பார்த்ததை எல்லாம், இன்று தன்னலம் பாதிக்கப்பட்டதும் வாய்கூசாமல் குற்றச்சாட்டாக வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

 

நவம்பர் 20ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கும் மல்லை சத்யா, முதலில் தனது நேர்மையை மக்கள் முன்பு நிரூபிக்க வேண்டும் என்று, சமூகவலைதளங்களில் அவரை விமர்சனம் செய்கின்றனர். இதற்கு மல்லை விளக்கம் தர வேண்டும்.

 

எது எப்படியானாலும், ம.தி.மு.க.வின் உட்கட்சிச் சண்டையாக ஆரம்பித்த இந்த விவகாரம், வைகோவின் நேர்மை மற்றும் தொண்டர்களின் நம்பிக்கை ஆகிய இரண்டு தூண்களைப் பற்றிய கேள்விகளுடன் அரசியல் களத்தில் புதிய பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.

 

நவம்பர் 20-ம் தேதி மல்லை சத்யா புதிதாகக் கட்சி தொடங்கவிருக்கிறார் என்ற அறிவிப்பும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் உள்நோக்கம் உண்டு என்பதைக் காட்டுகிறது. இந்தப் பூதம், ம.தி.மு.க-வை எங்கே கொண்டுபோய் நிறுத்துகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon