--- --:--:-- --

புதிய கட்சி தொடங்குகிறாரா சசிகலா?

3

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான இன்று தனது புதிய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார் சசிகலா. பசும்பொன்னில் சசிகலா என்ன சொல்ல போகிறார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த சசிகலா, அவரது மறைவுக்கு பிறகு நிஜ அரசியலுக்குள் நுழைந்து, 2016 ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார்.

 

அதன் பின்னர், கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சசிகலாவை எதிர்த்து அன்றைய முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார்.
முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க இருந்த வேளையில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றார். அவர் சிறை செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்து விட்டுச் சென்றார்.

 

4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, தமிழ்நாடு அரசியலே மாறி இருந்தது. மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிமுகவில் மீண்டும் சசிகலாவால் கோலோச்ச முடியவில்லை. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அதிமுக தலைமையிடம் இருந்து எந்த ஒரு சாதகமான சமிக்ஞையும் வரவில்லை.

 

இதனால் அடுத்த கட்டமாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், கடந்த ஒரு மாதமாக தனது ஆதரவாளர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். அண்மையில் கூட அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, “தேர்தல் களத்தில் இறங்குவேன்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய சசிகலா, பசும்பொன்னில் இன்று முக்கிய முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனைப் போன்று புதிய அரசியல் கட்சித் தொடங்கி, அதை பதிவு செய்து தேர்தலை சந்திப்பது கடினம். ஆகையால், அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறாரா? அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Right Menu Icon