--- --:--:-- --

தவெகவினர் கூறியது முற்றிலும் பொய் – வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம்

4

வெக நிகழ்ச்சிக்கு ஒன்றரை மாதங்களாக போராடி காவல்துறை அனுமதி பெற்றதாக நிர்வாகிகள் கூறிய நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தவெக நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும்,கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

 

கடந்த 28.01.2026-ம் தேதி, தவெக கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை 08.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தனர். இதுகுறித்து காவல் அறை சார்பில் உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 05.02.2026 அன்று தவெக நிர்வாகம் சார்பாக ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்” என மனு அளித்தார். மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் மனு அளித்தார்.

 

இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில், 18.02.2026 அன்று அளித்த மனுவில், “வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம்.

 

அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25.000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்” மேலும், “இந்த சந்திப்பில் மேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது”. இதுதொடர்பாக காவல் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026 ம் தேதி சமர்ப்பித்தனர்.

 

தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதம் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.

தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெறு கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினாரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால். நிகழ்ச்சியில், மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.

 

இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை மீதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காவல்துறையினரால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon