மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் ரத்து..!
அதிகப்படியான சாலை வரி காரணமாக, மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்று மாலை 5 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குச் சென்ற 30க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளுக்கு கேரள அரசு 70 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்தது.
இதேபோன்று கர்நாடக அரசும், தமிழக பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த 7 நாட்களில் ஒரு கோடியே 15 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது. மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் படி, தமிழ்நாடு அரசு பிற மாநில பதிவெண் பேருந்துகளுக்கு சாலை வரி விதித்து வருகிறபடியே தாங்களும் வரி வசூலிப்பதாக கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு பேருந்துக்கு நான்கரை லட்ச ரூபாய் வரி செலுத்தும் நிலை உள்ளதால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இன்று மாலை 5 மணி முதல் மாநிலங்களுக்கு இடையேயான 1,000 பேருந்துகள் இயங்காது என 5 மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எந்தவித வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்றும் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தங்கள் சங்கத்தின் சார்பில் சுமார் 400-க்கும் மேற்பட்ட வெளி மாநில பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.





