காய்ச்சலுக்காக போட்ட ஊசி இடுப்பிலேயே சிக்கியது!
காய்ச்சலுக்காக போட்ட ஊசி உடைந்து மகனின் இடுப்பிலேயே சிக்கிக் கொண்டதை மறைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பெற்றோர் புகார் அளித்திருக்கிறார்கள். சென்னை மாதவரத்தை சேர்ந்த ஜான் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 23ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே ஜானை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு ஊசி மற்றும் மருந்துகளை எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி மருத்துவமனை செவிலியரிடம் ஊசி போட்டுக் கொண்ட ஜான் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

காய்ச்சல் குறைந்து விட்ட நிலையில் ஊசி போட்ட இடத்தில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு மேலாக வலி இருந்ததால் சந்தேகமடைந்த ஜான் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்று தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பிரச்சினையை கூறியுள்ளார்.
ஆனால் அந்த மருத்துவரும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என ஆறுதல் தெரிவித்ததோடு ஊசி போட்ட இடத்தில் ஐஸ் கட்டி வைத்து தேய்த்து விட்டால் வலி குறைந்துவிடும் என கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. ஐஸ் கட்டி வைத்த பின்னரும் வலி குறையாததால் பதற்றமடைந்த ஜான் இறுதியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையை நாடினார்.
அங்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்ட போது தான் தன்னுடைய வலிக்கான உண்மை காரணத்தை தெரிந்து அதிர்ந்து போனார் ஜான். இடுப்புக்குக் கீழ் பகுதியில் உடைந்து ஊசி ஒன்று சிக்கியிருப்பது எக்ஸ்ரே படத்தில் துல்லியமாக தெரிந்தது. சற்றும் தாமதிக்காத அரசு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசியை அகற்றியுள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக விளக்கம் கேட்டபோது ஜான் தங்கள் மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்ளவில்லை என தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சல் அடைந்த ஜானின் பெற்றோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனு அளித்துள்ளனர்.





