--- --:--:-- --

உலக அளவில் கொரோனா பாதிப்பில் “டாப் 3” இடத்துக்கு முன்னேறியது இந்தியா…!! ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி படு ஸ்பீட்

wrty

சர்வதேச அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறையும் நிலையில் இந்தியா மற்றும் தென் அமெரிக்காவின் பிரேசில் மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாடுகளின் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ளது.

 

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ், அந்நாட்டின் ஊகான் நகரில் பேயாட்டம் ஆடி ஆயிரக் கணக்கில் உயிர்ப்பலி வாங்கியது, தொடர்ந்து கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்த இந்த வைரஸ், கொத்து, கொத்தாக உயிர்களை பறித்தது.

 

அது போல் அமெரிக்காவையும் ஆட்டிப்படைத்த இந்த கொடிய தொற்றால் அங்கு பலி எண்ணிக்கை வேகமாக லட்சத்தை தாண்டியது. தொடர்ந்து கடந்த மே , ஜுன் மாதங்களில் இந்தியாவில் கொரோனா படையெடுப்பு விறுவிறு என அதிகரித்து தற்போது உச்சத்தில் உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை கால் லட்சம் என்ற அளவுக்கு எகிறி வருகிறது.

 

உலக அளவில் கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகளே இல்லை என்ற அளவுக்கு இந்த தொற்று பரவி விட்டது. இந்தியாவில் ஆரம்பத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் உலக அளவில் பாதிப்பில் டாப் 10 இடத்துக்கு முன்னேறியது.

தொடர்ந்து டாப் 5 இடத்துக்கும் முன்னேறிய இந்திய, கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து விறுவிறுவென உயர்ந்ததால் தற்போது ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்துக்கு சென்றுள்ளது.

 

தற்போதைய நிலையில், உலக அளவில் பாதிப்பு ஒரு கோடியே 15 லட்சத்து 56 ஆயிரத்து 681 ஆகவும், உயிரிழப்பு 5,36,776 ஆக உள்ளது. இதில் கால்வாசி அளவுக்கு ( பாதிப்பு 29,82,928 பேர், உயிரிழப்பு1,32,569) அமெரிக்காவில் மட்டுமே கொரோனா தாண்டவம் ஆடி உலகிலேயே பாதிப்பில் டாப் டில் உள்ளது.

 

அடுத்ததாக தென் அமெரிக்க நாடுகளில் மிகப் பெரிய நாடான பிரேசிலில் லேட்டாக தொற்று பரவத் தொடங்கி, மிகக் குறுகிய நாட்களில் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் எண்ணிக்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ( பாதிப்பு 16, 04,585, உயிரிழப்பு 64,900) உயர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தற்போது 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ள இந்தியாவில், பாதிப்பு 6, 97,836 ஆகவும், உயிரிழப்பு 19,700 ஆகவும் உள்ளது. 4 – வது இடத்துக்கு தள்ளப்பட்ட ரஷ்யாவில் பாதிப்பு 6,81,251 ஆகவும், உயிரிழப் போ 10,161ஆகவும் உள்ளது.


தற்போதைய நிலையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொற்றின் வேகம் குறையத் தொடங்கி விட்டது ஆறுதலான விஷயம். ஆனால் இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளில் இப்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், இந்த மாத இறுதியில் இந்த நாடுகளில் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவே கருதப்படுகிறது.


Leave a Reply

Right Menu Icon