7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற கணவன்..!
வளைகாப்பு நடத்த கோரி 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 20 வயது அற்புதராஜ், 18 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள சக்தி தனக்கு வளைகாப்பு நடத்துமாறு கூறி வந்ததில் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனைவியை கடுமையாக தாக்கிய கணவன் அற்புதராஜ் சக்தியின் கழுத்து மற்றும் முகத்தில் கையால் அடித்து விட்டு வேலைக்கு சென்றுவிட்டான்.
படுகாயங்களுடன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த சக்தி உயிரோடு இருக்கிறாரா என்பதை பார்க்க அற்புதராஜ் மீண்டும் ஒருமுறை வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் மனைவி சக்தியிடம் சலனம் ஏதும் இல்லாததால் மாமியாருக்கு போன் செய்து அற்புதராஜ் உங்கள் மகளுக்கு போன் செய்தேன் ஆனால் போனை எடுக்கவில்லை என்னவென்று போய் பாருங்கள் என கூறியுள்ளார் .
இதனால் பதறியபடி வீட்டிற்கு வந்த சக்தியின் தாய் வீட்டில் மகள் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதபடி அற்புதராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏதும் அறியாதது போல் மனைவியின் உடலை பார்த்து அழுது அழுது நடித்துள்ளார்.
ஆனால் அற்புதராஜ் மீது சந்தேகப்பட்ட போலீசார் உரிய விதத்தில் விசாரணை நடத்தியதில் மனைவியை அடித்துக் கொன்றதை அற்புதராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். போலீசாரின் விசாரணையில் அற்புதராஜ் நாடகம் அம்பலமாகியுள்ளது.





