திருமணமான 3 மாதத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவர்..!
திருமணமான 3 மாதத்தில் கொரோனாவால் கணவர் உயிரிழக்க தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை மீட்டுத்தர இளம் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் கரிவெடு கிராமத்தை சேர்ந்த கோபிநாத் தேன்மொழி தம்பதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
கொரொனாவால் பாதிக்கப்பட்ட கோபிநாத் வாலாஜா பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபிநாத் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உடலை ஒப்படைப்போம் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.
ஏற்கனவே நான்கரை லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் மேலும் பணம் செலுத்த முடியாமல் திணறும் கோபிநாத் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தனியார் மருத்துவமனையிடமிருந்து கணவரின் உடலை மீட்டு தருமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






