--- --:--:-- --

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் எப்படி? ரூ.1. 59 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல்…வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்!

11

திருப்பூர் மாநகராட்சி 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிக்குழு தலைவர் கோமதி குமார், பட்ஜெட்டை மேயர் தினேஷ்குமாரிடம் அளித்தார். பட்ஜெட் கூட்டத்துக்கு துணை மேயர் மேயர் பாலசுப்ரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

நிதிக்குழு தலைவர் கோமதி குமார், பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” 2023-24-ம் ஆண்டுக்கான வருவாய் நிதி வரவினம் ரூ.887 கோடியே 36 லட்சம். குடிநீர் நிதி வரவினம் ரூ.540 கோடியே 16 லட்சம். ஆரம்ப கல்விநிதி வரவினம் ரூ.9 கோடியே 65 லட்சம் என, மொத்த வரவினம் ரூ.1,437 கோடியே 17 லட்சம் ஆகும்.

 

இதில், வருவாய் செலவினமாக ரூ.882 கோடியே 57 லட்சம், குடிநீர் நிதிச் செலவினம் ரூ.549 கோடியே 2 லட்சம், ஆரம்பக் கல்வி நிதி செலவினம் ரூ.7 கோடியே 17 லட்சம் என, மொத்தம் ரூ.1,438 கோடியே 76 லட்சம் ஆகும். இதன்படி, நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 59 லட்சம் நிதிப் பற்றாக்குறையாக உள்ளது. இப்பற்றாக்குறை சரி செய்யப்படும்” என்றார்.

 

பட்ஜெட் உரையில் இடம் பெற்ற அறிவிப்புகளின் சாராம்சம் வருமாறு: * திருப்பூரில், 2023-24 ஆம் ஆண்டில் புதிதாக புற்றுநோய் மருத்துவமனை நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

 

* அம்ரூத் திட்டத்தின் கீழ் நான்காவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு , திருப்பூர் வடக்குப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு சோதனை ஒட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், மாநகரின் தெற்கு பகுதிக்கும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

 

* தமிழகத்திலேயே முதன் முறையாக, குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் திட்டம் அமலாக்கப்படும்.

 

* அம்ரூத் திட்டத்தில், பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த உத்தேசித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

 

* நொய்யல் நதிக்கரையின் இருபுறமும், வஞ்சிபாளையம் முதல் காசிபாளையம் வரை புதிய சாலைகள் மற்றும் ஈஸ்வரன் கோவில் பாலம் , நடராஜ் தியேட்டர் சாலை பாலம் மற்றும் புதிய இரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

 

*நொய்யலாற்றில் 6.70 கி.மீ நீளத்திற்கு தூய்மைப்படுத்தி இருகரையோரங்களிலும் தடுப்புச்சுவர்கள், நடைபாதை மற்றும் சாலைகள், பூங்காக்கள் அமைத்து மேம்படுத்த, ரூ .184.71கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன .

 

* ஆரம்ப சுகாதார நிலையம் குளத்துப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட உள்ளது. புதியதாக மருத்துவ கிடங்கு மங்கலம் சாலையில் எஸ்.ஆர்.நகர் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

 

* மேலும், 51 துணை சுகாதார நிலையம் புதியதாக அமைக்கப்பட உள்ளன. 3 சுகாதார நிலையங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் ( Ultra Sound Scanner ) கருவி புதியதாக அமைக்கப்படும்.

 

* சுற்றுச் சூழலை பாதுகாக்க அடர் மூங்கில் பூங்காக்கள், அடர் காடுகள், மரம் நடுதல், தனியார் பங்களிப்பு மூலம் மியாவாக்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, பசுமை மாநகரமாக மாற்றப்படும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, நெகிழியில்லா தூய்மையான மாநகரமாக மாற்றப்படும்.

 

* திருப்பூர் திருவிழாவாக பொங்கல் திருவிழாவை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை அன்று கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

 

* ரூ .17.60 கோடி மதிப்பீட்டில் 6604 குழல் விளக்குகளை எல்.இ.டி. தெரு விளக்குகளாக மாற்றியும், 3263 எண்கள் புதிய எல்.இ.டி. தெருவிளக்குகள் பொருத்தும் பணி முடிவுற்றுள்ளது.

 

* மாநகராட்சிக்கு சொந்தமான 81 கட்டிடங்களில் ரூ. 2.44 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மின் சக்தி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, ஆண்டுக்கு சராசரி 450 மெகாவாட் மின்சாரம் தயார் செய்யப்படுகிறது.

 

* இடுவாய் பகுதியில் சூரிய ஒளி மூலம் 4.8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையும் , அதே பகுதியில் சூரிய ஒளி மூலம் 2.0 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் ஆலையும் முறையே ரூ . 28.30 கோடி மற்றும் ரூ . 12.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

 

* நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ . 2.61 கோடி மதிப்பீட்டில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

 

* தமிழ்நாடு நகர்ப்புர சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ( TURIP 21-22 ) கீழ் 12.27 கி.மீ நீளத்திற்கு 51 பணிகள் ரூ .10.01 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் முடிவுற்றது .

 

* 15வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் 107.87 கி.மீ நீளத்திற்கு 219 பணிகள் ரூ.18.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 14.67 கி.மீ நீளத்திற்கும், இதே திட்டத்தின்கீழ் ரூ. 33.84 கோடி மதிப்பீட்டில் 93.55 கி.மீ நீளத்திற்கு கப்பிச் சாலைகள் தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

* 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ .81.36 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்கள் மற்றும் பாலங்கள்அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

 

* 2023-24 நிதியாண்டில் சாலை பணிகளுக்கு NSMT திட்டத்தின் கீழ் ரூ. 21.45 கோடி; SFC திட்டத்தின் கீழ் ரூ. 15.00 கோடி மதிப்பீட்டுக்கும், பாலங்கள் அமைக்க ரூ. 36.36 கோடி மதிப்பீட்டில் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ . 26.00 கோடிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

* திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்கு துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் 15 நுண் உரமாக்கல் மையங்கள் ரூ.1120.00 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருப்பூர் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 13 நுண் உரமாக்கல் மையங்கள் ரூ .1037.00 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

 

* மண்டலம் எண் 2 மற்றும் 3 ல் தலா 8 வார்டுகள் வீதம் மொத்தம் 16 வார்டுகளில் தனியார் மயமாக்கல் மூலம் எடையளவு முறையில் குப்பைகளை சேகரித்து தரம்பிரித்து மேலாண்மை செய்யப்படுகிறது.

 

* மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளின் ஒரு பகுதி, உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

 

* 2023-24ஆம் ஆண்டிற்கு கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்துகள், கொசுத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் செலவினத்திற்கு ரூ .429.00 இலட்சம் ஒதுக்கீடு.

 

* 2023-24ம்ஆண்டில் சுமார் 6369 தெருநாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு ரூ.44.58 இலட்சம் நிதி ஒதுக்கீடு

 

* மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக ரூ.12,52,323 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மருந்து பொருட்கள் ரூ .8,69,949 க்கு பெறப்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டிற்கு ரூ. 16.02 கோடி நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கையில் உள்ளது.

 

* சுற்றுலா மேம்பாட்டு கழகத்துடன் இணைத்து, ஆண்டிப்பாளையம் குளத்தை சீரமைத்து, படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

* திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, ரூ.64.20 லட்சம் மதிப்பில், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

 

* மாநகராட்சியின் 102 பள்ளிகளில் 19,824 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1.10 கோடியில் 4 இடங்களில் சமையல்கூடங்கள் கட்டப்படும்.

 

மேலே குறிப்பிட்டுள்ள அறிவிப்புகளுடன் கடந்த நிதியாண்டில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், அதற்கான ஒதுக்கீடு விவரம், நடப்பு ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடு விவரம் உள்ளிட்டவையும் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.

சொன்னதை செய்வாரா மேயர்? சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்…

திருப்பூர் மேயராக கடந்த 04.03.2022 அன்று, திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற உற்சாகத்தில் மேயர் அளித்த பேட்டியில், திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தின் முன்னோடி மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

அவ்வாறு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, முழு உத்வேகத்துடன் அவர் சுழன்று கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனினும் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள், அறிவித்த சில திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுகின்றன. இதனால், வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

கம்யூனிஸ்ட் வரவேற்பு; அதிமுக எதிர்ப்பு!

திமுகவின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், பட்ஜெட்டை வரவேற்றுள்ளன. திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதிமுகவோ பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளது.

 

ஆனால், மாநகராட்சி பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோ, நகரின் கட்டமைப்பை முன்னெடுக்கும் வகையில் திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. வழக்கம் போல் எந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது போன்ற புள்ளி விவரங்களே இடம் பெற்றுள்ளன. தொழிலாளர்கள், தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, மாநகர பட்ஜெட்டில் பதில் இல்லை என்ற அதிருப்தி குரல்கள் இல்லாமல் இல்லை.

 

திடக்கழிவு மேலாண்மை வரி குறித்து மண்டல அளவில் முடிவு செய்து கொள்ளலாம் என்று முன்பு தெரிவித்துவிட்டு, தற்போது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருவதைத் தவிர, புதிய அறிவிப்புகள் இல்லை என்றும் அதிமுக கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்தனர்.

 

அதே நேரம், மத்திய பாஜக அரசின் திட்டங்கள் திருப்பூரில் நிறைவேற்றப்பட்டு வருவதாக, பாஜக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, கன்வென்ஷன் ஹால் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளதை, பாஜக கவுன்சிலர் தங்கராஜ் சுட்டிக் காட்டினார்.

 

பட்ஜெட் அறிவிப்பின்படி, நடப்பு ஆண்டில் ரூ.1 கோடியே 59 லட்சம் நிதிப் பற்றாக்குறையாக உள்ளது. இப்படி பட்ஜெட்டில் பற்றாக்குறை நிலவும் சூழலில், பட்ஜெட் அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே இல்லாமல் செயல்வடிவம் பெறுமா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இதற்கு மேயர் என்ன செய்யப் போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

Right Menu Icon