நிவர் புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை..!
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்துள்ளது. இரவிலும் மழை நீடித்ததால் வடபழனி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இடைவிடாது மழை பெய்ததால் தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் போக்குவரத்து பணிமனையில் தண்ணீர் தேங்கி நின்று உள்ளது. கேகே நகர், ஆர் கே சண்முகம் சாலை குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எழும்பூர் நீதிமன்றம் அருகே இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தில் வேரோடு சாய்ந்தது. தகவலறிந்த தீயணைப்பு போலீசார் மற்றும் காவல்துறையினர் நள்ளிரவில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முட்டுக்காடு கல்பாக்கம் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ளதோடு வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.






