--- --:--:-- --

இன்றும் நாளையும் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அலர்ட்

2

ங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

வங்கக்கடலில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவிவருகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது.

 

திருவான்மியூர், மயிலாப்பூர், அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, தியாகராய நகர், கிண்டி, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னை மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதேபோல, வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்தது. ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் பகுதிகளிலும் பெய்த மழையால், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த திடீர் கனமழையின் காரணமாக, குற்றாலத்தில் குற்றால மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், அது பின்னர் வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon