--- --:--:-- --

மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு..!

1

கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் சேவைக்கான இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

 

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.
அதில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 10 740 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 34.8 கிலோ மீட்டர் தொலைவில், இரு வழித்தடங்கள், 32 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் கோவை மெட்ரோவுக்கு விரிவான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டது.

 

இதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை, 27 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய விரிவான அறிக்கை தயாரானது. இதற்காக 11340 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.

 

இந்த அறிக்கை மற்றும் துணை அறிக்கை தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பரில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் முழுவதுமாக சமர்ப்பித்தது. அது அவர்களது பரிசீலனையில் இருந்து வந்தது. இதனிடையே, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்னெடுப்புகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையில் எடுக்க, தங்கள் ஊரில் மெட்ரோ ரயில் வரப்போவதை எண்ணி கோவை மக்களும், மதுரைவாசிகளும் அகமகிழ்ந்தனர்.

 

ஆனால் அவர்களின் கனவை கலைக்கும் விதமாக வந்திருக்கிறது நிராகரிப்பு செய்தி. இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய குறிப்பில், போதுமான மக்கள் தொகை இல்லை என்பதே இதற்கு காரணம் என கூறியிருக்கிறது.

 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் மக்கள் தொகை 15 லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாகவும், மதுரையில் மக்கள் தொகை 15 லட்சமாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2017, மெட்ரோ ரயில் கொள்கையின்படி, 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலேயே மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்பதால், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

மெட்ரோ திட்டங்களுக்கு அங்கு அதிக செலவு ஏற்படும், நீண்ட கால நிலைத்தன்மைக்காக கவனமாக திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நகரங்களுக்கு பிஆர்டிஎஸ் எனப்படும் பஸ் ரேப்பிட் சிஸ்டம் போன்றவை பொருத்தமாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சென்னையில் இந்த பிஆர்டிஎஸ் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.

 

அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

 

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon