15 சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு கட்டடங்களை திறந்துவைத்தார்!
மூன்று மாவட்டங்களில் 15 சேமிப்பு கிடங்குகள் உட்பட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் மதுரையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாக கட்டடம் என மொத்தம் 74 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
போக்குவரத்து கழகம் சார்பில் தர்மபுரி மாவட்டம் சித்திரை பட்டியில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் 24 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சை அரசு மருத்துவமனையின் அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் தீக்காய சிகிச்சை பிரிவு கட்டடம் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி கட்டடம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் கார பேட்டையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் கட்டப்பட்டு உள்ள ஒப்புயர்வு மையம் மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனையின் புதிய கண் சிகிச்சை மைய கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத் துறையின் தனிக்கை பிரிவில் காலியாக உள்ள 30 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதன் அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.







