333 பேருக்கு மட்டும் தான் சோதனையா..?கொரானா குறித்த உண்மை நிலை என்ன? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!!
கொரானா குறித்த உண்மை நிலவரம் குறித்து சட்டப் பேரவையில் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார்.
கொரானா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், கொரானா தொடர்பாக 333 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.டெல்லியில் இருந்து வந்த நபருக்கு கொரானா உறுதியான நிலையில் அவருடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது? உண்மை நிலையை சபைக்கு தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் எத்தனை ஐ.சி.யூ வார்டுகள் உள்ளன. மாவட்ட வாரியாக வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதா? கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.60 கோடி மட்டும் ஒதுக்கியது போதாது. ரூ. 500 கோடி அல்லது 1000 கோடி ரூபாய் ஒதுக்கினாலும் கூட பரவாயில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அயர்லாந்தில் இருந்து வந்த பயணி மற்றும் டெல்லியில் இருந்து வந்த வட மாநில இளைஞர் ஆகியோருக்கு கொரானோ உறுதியான நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை நடத்தி தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். டெல்லியிலிருந்து வந்த நபர் சென்னையில் ஒரு சலூனில் 2 நாட்கள் பணி புரிந்ததும் தெரிய வந்து, சலூனுக்கு வந்தவர்கள் பற்றியும் கண்டறியும் முயற்சிகள் நடக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அனைத்து உயர் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் இதுவரை 5 முறை ஆலோசனை நடத்தியுள்ளார். பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கியுள்ளார். இதுவரை அரசு மருத்துவனைக்கு வராதவர்கள் கூட தற்போது வரத்தொடங்கியுள்ளனர். கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினசரி செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகிறேன்.
அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே 1600 படுக்கைகள் உள்ளன. 20 ஐசோ லேசன் படுக்கைகளை 100 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை மருத்துவமனைகளுக்கும் வெண்டிலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. 10 லட்சம் மூன்றடுக்கு முகக் கவசம் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உச்சபட்ச நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.







