“மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு!!” ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமானதால் தமிழக அரசு அதிரடி!!
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமான நிலையில், தமிழக அரசு அதிரடியாக அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த செப்டம்பர் 15-ந் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேறியது. ஆனால் ஒரு மாதம் கடந்தும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது.
ஆளுநர் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழக அரசுக்கும் நெருக்கடி முற்றிய நிலையில், அமைச்சர்கள் 5 பேர் ஆளுநரைச் சந்தித்து விரைந்து ஒப்புதல் வழங்க கோரிக்கை வைத்தனர் . திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆளுநருக்கு கடிதம் எழுதி, மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு வலியுறுத்தினார்.
ஆனால், இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த ஆளுநர், தாம் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, யோசித்து முடிவெடுக்க 4 வாரம் வரை அவகாசம் தேவை எனக் கூறியிருந்தார். ஆளுநரின் இந்தப் பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது.
விமர்சனங்களும் கடுமையாக எழுந்தது. மேலும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி கோரி உச்ச நீதி மன்றத்தில் விடுக்கப்பட்ட முறையீடும் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், ஆளுநரின் ஒப்புதல் இன்றியே தமிழக அரசு இந்த 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமாகும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டம் 162-வது விதியின் கீழ் அரசாணை வெளியிட இடமுள்ளது.
அதன்படியே அரசாணை வெளியிடப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் தாமதத்தால் தமிழக அரசே துணிந்து அரசாணை வெளியிட்டதன் மூலம் இந்தாண்டு மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு இடம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.






