--- --:--:-- --

குப்பைக்கு குட்பை! * நாட்டிற்கே வழிகாட்டும் திருப்பூர் மாநகராட்சி! * திராவிட மாடல் அரசால் வருகிறது புது திட்டம்..

dtytdfu

திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. திமுக அரசின் நடவடிக்கையால், திருப்பூர் மக்கள் பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

 

“திருப்பூர்ல குப்பை இல்லன்னு சொன்னா பரிசு தர்றேன்” – மேயர் தினேஷ்குமார் வீசிய இந்தச் சவால், இப்போது பனியன் சிட்டியின் அரசியல் வட்டாரத்தில் ‘டாப் கியர்’ எடுத்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக திருப்பூரை மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருந்த குப்பை விவகாரம், ஒருவழியாக க்ளைமாக்ஸை எட்டியிருக்கிறது. அதுவும் சாதாரணமான தீர்வு அல்ல; ரூ.200 கோடி பட்ஜெட்டில் ‘குப்பையில் இருந்து மின்சாரம்’ என்கிற மெகா திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது தமிழக அரசு!

 

சட்டசபையில் விஜயகுமார் வாய்ஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, திருப்பூர் எம்.எல்.ஏ. விஜயகுமார் குப்பை பிரச்சினையை கிளறினார். அவரது கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த ‘ரிடர்ன் கிப்ட்’ தான் இப்போது பேசுபொருள். “விஜயகுமார், உங்களைத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன்… நாங்க வேலை செய்ய நீங்க விடுறீங்களா?” என தமாஷாக பதிலை தொடங்கிய அமைச்சர் நேரு, குப்பையைக் கொட்ட இடம் வாங்குவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் போட்டுடைத்தார்.

 

இருந்தாலும், ‘திருப்பூரைத் தளமாக்குவோம்’ என்கிற பாணியில், நகரத்தை தாண்டி 15 கி.மீ தூரத்தில் இடம் இருந்தாலும் அங்கு ஏற்பாடுகளை செய்து குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்ற அமைச்சர் நேரு, சென்னை, கோவை வரிசையில் திருப்பூருக்கும் ரூ.200 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதிரடியாக அறிவித்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார்.

 

அண்ணாமலை, அடுத்த வேலையைப் பாருங்க!

இந்த அறிவிப்பால் உற்சாகமான திருப்பூர் மேயர் தினேஷ்குமார், குப்பை விவகாரத்தில் அரசியல் லாபம் தேடியவர்களுக்கு ‘நோஸ்கட்’ கொடுத்திருக்கிறார். குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் போராடிய நிலையில், “குப்பை பிரச்சினை முடிந்துவிட்டது, இனி அடுத்த பிரச்சினையைக் கொண்டு வாருங்கள், தீர்வு சொல்ல நிர்வாகம் ரெடி” என மேயர் அடித்திருக்கும் பஞ்ச், உள்ளூர் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

 

“நாற்பது வருஷமா இருந்த திடக்கழிவு மேலாண்மைப் பிரச்சினைக்கு, மூணே மாசத்துல விடை கண்டுபிடிச்சுருக்கோம். இது இந்தியாவுக்கே வழிகாட்டப் போற ‘திருப்பூர் மாடல்’!” என்கிறார் மேயர் நம்பிக்கையுடன்.

 

மேயர் தினேஷ்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் 40 ஆண்டுகளாக நிலவி வரும் திடக்கழிவு மேலாண்மை பிரச்சினைக்கு, திராவிட மாடல் அரசும் திருப்பூர் மாநகராட்சியும் தீர்வு கண்டுள்ளது. திருப்பூரில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அறிவிப்பை வெளியிட்ட திராவிட மடல் அரசுக்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

திருப்பூரில் கடந்த 3 மாதங்களாக குப்பை பிரச்சினை அதிகம் தலைதூக்கியது; நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த விவகாரத்தில் மாநகராட்சி சற்று தடுமாறியது என்பது உண்மைதான். ஆனால், தற்போது திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 40,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

 

எங்களுக்கு இடம் மட்டுமே பிரச்சினையாக இருந்தது. இப்போது குப்பை மேலாண்மைக்கு 25 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கோவில்வெளியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொடங்கி இருக்கிறோம். இது முழு வெற்றி பெற்றுள்ளது. இப்பணிக்கு டெண்டர் கோரியுள்ளோம்; இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கிறோம்” என்று உற்சாகம் பொங்க குற்றம் குற்றமே தரப்பிடம் தெரிவித்தார் மேயர் தினேஷ்குமார்.

 

ஸ்பாட் விசிட்: வெறும் வாய்வார்த்தைதானா?

இதையடுத்து, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் நிருபர்கள் குழு களத்தில் இறங்கி, திருப்பூரின் மூலை முடுக்குகளையெல்லாம் ஜல்லடை போட்டது. திருப்பூர் 24 -வது வாா்டு 15,வேலம்பாளையம் ரோடு, பகுதி பாலம் அருகே குப்பை கொட்டப்பட்டு, பெரும் சுகாதாரக் கேடு நிலவி வந்தது. இது குறித்து பொதுமக்கள் நமது குற்றம் குற்றமே வார இதழை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினர்.

 

இந்த விவகாரத்தை மேயர் தினேஷ்குமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அணைப்பாளையம் பாலம் அருகே மலை போலக் குவிந்து, துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த இடம் இப்போது ‘பளிச்’ எனக் காட்சியளிக்கிறது. அங்குக் குப்பை கொட்டியவர்களைக் கண்டுபிடித்து அபராதம் விதித்ததோடு, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தியது வரை மாநகராட்சி நிர்வாகம் காட்டிய வேகம், ‘புயல்’ வேகம் தான்!

 

சுமார் 40,000 டன் குப்பைகளைத் தரம் பிரித்து அகற்றியிருப்பது லேசுப்பட்ட காரியமல்ல. நீதிமன்ற உத்தரவுகளால் தற்காலிகமாகத் தடுமாறிய நிர்வாகம், இப்போது 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, ‘கோவில்வெளி’ பகுதியில் சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது.


பிப்ரவரி 10… திருப்பூரின் திருப்புமுனை!

“பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள்ள முழுவீச்சுல இயந்திரங்கள் வேலை செய்யும். இது சாதாரண மைல்கல் இல்ல, இது ஒரு வரலாற்றுச் சாதனை” என மேயர் தினேஷ்குமார் சொல்லும்போது, அதில் ஒரு ‘விக்டரி’ தெரிகிறது.

 

மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், திருப்பூர் மாநகராட்சி தன் குப்பையைத் தானே கையாளும் தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாறும். ‘குப்பைக்கு குட்பை’ சொன்னதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து லாபம் ஈட்டும் இந்த ‘திராவிட மாடல்’ திட்டம், மற்ற மாநகராட்சிகளுக்கும் ஒரு பாடமாக அமையப் போவது உறுதி.

 

மொத்தத்தில், திருப்பூரில் குப்பை அரசியல் செய்தவர்களுக்கு, மேயர் தினேஷ்குமார் ‘தூய்மையான’ செக் வைத்துள்ளார். இப்போது பனியன் சிட்டி மக்கள், தொழில் துறையினர், ஆளுங்கட்சியினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

 

அதே நேரம், திருப்பூர் மாநகராட்சியின் இந்த வேகமும் விவேகமும் அடுத்தடுத்த பராமரிப்பிலும் நீடிக்க வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு!


 

Leave a Reply

Right Menu Icon