உயிரிழந்த கணவனின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த மூதாட்டி…!
வயதான நிலையில் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்ய எந்தவித உதவியும் கிடைக்காமல் கண் தெரியாத மூதாட்டி 15 மணிநேரம் சடலத்தோடு காத்திருந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. கொச்சியை பூர்வீகமாக கொண்ட 80 வயது தங்கப்பன் அவரது மனைவி 75 வயது ஜெயா ஆகிய இருவரும் சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே ரோசரி சர்ச் சாலையில் ஓரமாக வசித்து வந்தனர்.
அவர்களின் நிலையை தினந்தோறும் கவனித்து சென்ற வழக்கறிஞர் ஒருவர் மூத்த தம்பதிகளுக்கு தள்ளுவண்டி கடை வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. தங்கப்பனுக்கு ஒரு கால் ஊனம், ஜெயாவிற்கு மாலைக்கண் நோய் இருப்பதால் கண் பார்வை முழுமையாக தெரியாது. இந்த நிலையில் ஊரடங்கால் வருவாய் இல்லாமல் தவித்து வந்தனர்.

இதனிடையே தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை ஜெயா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தங்கள் வசிப்பிடமான சாலை ஓரத்திற்கு வந்து மீண்டும் தங்கிய நிலையில் தங்கப்பன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சாலையில் செல்வோர் மாலை அணிவித்து சென்றார்களே தவிர உடலை அடக்கம் செய்ய உதவி செய்யவில்லை. சுமார் 15 மணி நேரமாக மூதாட்டி ஜெயா தனது கணவர் உடல் அருகே இருந்ததை அறிந்த செய்தியாளர்கள் அங்கு சென்றதை அறிந்து சம்பவ இடத்திற்கு மயிலாப்பூர் காவல் துறையினர் வந்தனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







