தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவின் திருமணத்திற்கு அமீரக மன்னர் அளித்த கிஃப்ட்..!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவின் திருமணத்திற்கு அமீரக மன்னர் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் ஒரு கிலோ தங்கம் பரிசாக அளித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 15 கோடி ரூபாய் தங்க கடத்தல் வழக்கு ஸ்வப்னாவை சுற்றிச் சுழல்கிறது.
ஸ்வப்னாவின் வங்கி பெட்டகத்திலிருந்து ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த பணமும், நகையும் தங்கக் கடத்தல் மூலம் ஸ்வப்னா சம்பாதித்ததாக என்ஐஏ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்வப்னாவின் தந்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் மன்னர் வீட்டில் பணிபுரிந்தவர் என்றும் தனது பணியாளரின் மகளின் திருமணத்திற்கு மன்னர் அளித்த நகை மற்றும் பணத்தை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்ததாகவும் ஸ்வப்னா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஆதாரம் ஸ்வப்னா தரப்பில் என்ஐஏ நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் திருமணத்தின்போது ஸ்வப்னா அணிந்திருந்த நகைகளின் படம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் பணத்திற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.







