ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம்.. ரூ.15,516 கோடி முதலீடுகள்!
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்களில் 15,516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு வார கால பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிலையில், இங்கிலாந்துக்கு சென்றடைந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் உருவப்படத்தை திறந்துவைத்தார்.
இந்தப் பயணங்களின்போது, தொழில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்துஜா குழுமம், தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி கட்டமைப்பை ஏற்படுத்த 7500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் விரிவாக்கம், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின்மூலம், தனது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், நமது இளைஞர்கள் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், இது வெறும் எண்ணிக்கை கிடையாது, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





