சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டம்..!
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பதவியில் இருந்தவர் குழந்தைசாமி.
2016 ஆம் ஆண்டு காலமான இவரது வீடு அடையாறு கலா சித்ரா காலனியில் உள்ளது. தற்போது உறவினர் சீனிவாசனுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு அவர் சூதாட்டம் நடத்துவதாக தகவல் அறிந்த திருவான்மையூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். வண்ண வண்ண டோக்கன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் போக்கர் என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சிலர் ஆன்லைன் மூலம் பங்கேற்றதும் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு வண்ண டோக்கன்களுக்கும் ஒவ்வொரு தொகை என நிர்ணயித்துள்ளனர். கைதானவர்களில் வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.







