--- --:--:-- --

மே, ஜூன் மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது..!

3

மே, ஜூன் மாதங்களில் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது முடக்கத்தால் மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரேஷன் வழங்குமாறு உத்தரவிட்டது.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களில் ஒரு சதவீதத்தை கூட தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் கூறியிருப்பதை மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

 

இதனை ஏற்க மறுத்த தமிழக அரசின் வழக்கறிஞர் தமிழகத்தில் 5.66 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாகவும் இவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இதனையடுத்து தமிழக அரசின் மீது மத்திய உணவுத் துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கவுன்சிலிங் மையங்களை அமைப்பது குறித்தும், தமிழகம் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கான மையங்கள் அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon